பார்சிலோனா: பல தரப்பினர் எதிர்பார்க்காத அளவு சரிவைச் சந்திக்கும் ஸ்பெயினின் பார்சிலோனா காற்பந்து அணி, ஒரு வழியாக மீண்டும் வெற்றிப் பாதைக்கு மாறிக்கொண்டுள்ளது. லீக் பட்டியலில் கடைசி சில இடங்களில் உள்ள எல்கவைப் போராடி வென்றது பார்சிலோனா.
ஆட்டம் தொடங்கிய 20 நிமிடங்களுக்குள் பார்சிலோனா இரண்டு கோல்களைப் போட்டு முன்னணிக்குச் சென்றது. ஆனால், பிற்பாதியில் 62வது நிமிடத்தில் தொடங்கி இரண்டே நிமிடங்களில் கோல் எண்ணிக்கையைச் சமநிலைப்படுத்தியது எல்க. எனினும், 85வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார் பார்சிலோனாவின் நிக்கொலாஸ் கொன்சாலஸ்.
இவ்வணியின் விளையாட்டு இதன் முன்னாள் நட்சத்திரமும் தற்போதைய பயிற்றுவிப்பாளருமான ஷாவி ஹெர்னாண்டெஸைத் திருப்திப்படுத்தவில்லை. "பார்சிலோனாவுக்கென்றே உரிய விளையாட்டை நாம் இழந்துவிட்டோம், அதை மீட்கவேண்டும்," என்று ஷாவி குறிப்பிட்டார். "இவ்வணியில் நான் இல்லாத ஆறு ஆண்டு காலத்தில் மாறியுள்ள இதன் விளையாட்டு உத்திகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன," என்று ஷாவி வருத்தப்பட்டார். ஸ்பானிய லீக் பட்டியலில் ஆகக் கடைசி நிலவரப்படி ஏழாவது இடத்தை வகிக்கிறது பார்சிலோனா.
இதன் இடத்தைப் பிடிக்கும் வீம்புடன் விளையாடிவருகிறது சவியா. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சவியா, நான்காவது இடத்தில் இருந்த லீக்கின் நடப்பு வெற்றியாளரான அட்லெட்டிக்கோ மட்ரிட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. பார்சிலோனாவைப் போல் சவியாவும் வெற்றி கோலை ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் போட்டது. 88வது நிமிடத்தில் அந்த கோலைப் போட்டார் லூக்கஸ் ஒக்கம்போஸ்.
முதலிடத்தில் உள்ள ரியால் மட்ரிட்டுக்கும் சவியாவுக்கும் ஐந்து புள்ளிகள் வித்தியாசம் உள்ளன. லீக் கிண்ணத்துக்குக் குறிவைத்து அமைதியாக இயங்கிவருகிறது சவியா.

