செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கொவிட்-19 சூழலிலும்

இபிஎல் போட்டி தொடரும்

லண்டன்: கொவிட்-19 கிருமித்தொற்றால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் போட்டியிடும் பல குழுக்கள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், ஆட்டங்களை ஒத்திவைப்பது தொடர்பாக நேற்று முன்தினம் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் ஆட்டங்கள் தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் கிருமித்தொற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும் ஆட்டங்களைத் தொடர முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் லீக் போட்டியின் போக்கு பாதிக்கப்படும் என்று சில குழுக்கள் அக்கறை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு குழுவிலும் 25 ஆட்டக்காரர்கள் உள்ளனர். குறைந்தது 13 ஆட்டக்காரர்களும் ஒரு கோல்காப்பாளரும் இருந்தால் போதும், ஆட்டங்களில் களமிறங்கலாம் என்று கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகம் தெரிவித்தது.

டென்னிஸ் நட்சத்திரம் நடாலுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

மட்ரிட்: டென்னிஸ் நட்சத்திரம் ரஃபா நடாலுக்கு

கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற டென்னிஸ் ஆட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய நடாலுக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 முறை கிராண்ட் சிலாம் வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள நடால், உலகத் தரவரிசையில் முதல் இடத்தை முன்பு வகித்தவர்.

தமது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் குணமடைந்துவிடும் நம்பிக்கை இருப்பதாகவும் நடால் தெரிவித்தார்.

அடுத்து வரும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாகத் தாம் கொண்டுள்ள திட்டங்கள் பற்றி தமது ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். நடாலுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்தப் போட்டியை 35 வயது நடால் ஒருமுறை வென்றுள்ளார். நான்கு முறை இறுதிச் சுற்று வரை சென்று தோல்வி அடைந்தார். குவெத், அபுதாபியில் இருந்தபோது தாம் கிருமித்தொற்றால் பாதிப்படையவில்லை என்று நடால் தெரிவித்தார். அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று பரிசோதனை முடிவுகள் காட்டின.