சிங்கப்பூர்: சுசுகி கிண்ண காற்
பந்துப் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தை தாய்லாந்து நெருங்கிஉள்ளது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் அது வியட்னாமைச் சந்தித்தது.
இதில் 2-0 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வாகை சூடியது.
தென்கிழக்காசிய காற்பந்து ஜாம்பவானாகக் கருதப்படும் தாய்லாந்து, இதுவரை ஐந்து முறை சுசுகி கிண்ணத்தை ஏந்தியுள்ளது.
தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தை நேரில் காண 7,365
ரசிகர்கள் திரண்டனர்.
இரு குழுக்களும் தாக்குதலில் தீவிரம் காட்டும் ஆற்றல்மிக்கவையாக திகழ்வதால், ஆட்டம் தொடங்கியதும் கோல் வேட்டை சூடுபிடித்தது.
ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே வியட்னாமிய தற்காப்பில் ஏற்பட்ட கவனச் சிதறல், தாய்லாந்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றது.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் வியட்னாமிய தற்காப்பு ஆட்டக்
காரர் செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் சேர்த்தார் தாய்லாந்தின் நட்சத்திர வீரர் சனதீப் சொங்கிராசின்.
அடுத்த பத்து நிமிடங்களுக்குள் தாய்லாந்தின் இரண்டாவது கோலையும் அவர் போட்டார்.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் பந்தை மிக அழகாகத் தங்கள்
கட்டுக்குள் வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்திய தாய்லாந்து ஆட்டக்காரர்கள், வியட்னாமிய தற்காப்பு ஆட்டக்காரர்களைத்
திக்குமுக்காட வைத்தனர்.
28 வயது சனதீப்பிடம் பந்து சென்றபோது அதை மின்னல் வேகத்தில் வலைக்குள் புகுத்தினார்.
ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் தாய்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சனதீப் எடுத்தார். அதை மட்டுமே அவர் கோலாக்கியிருந்தால் தாய்லாந்துக்காக அவர் போட்ட முதல்
ஹாட்ரிக்காக அது பதிவாகி இருந்திருக்கும்.
ஆனால் அவர் அனுப்பிய பந்து நேராக வியட்னாமிய கோல்காப்பாளரிடம் சென்றது.
பந்து வலைக்குள் செல்லாதபடி கோல்காப்பாளர் பார்த்துக்கொள்ள, மூன்றாவது கோல் போடும் வாய்ப்பை தாய்லாந்து நழுவவிட்டது.
இருப்பினும், இறுதி வரை வியட்னாமிய குழுவால் கோல் போட முடியாமல் போனதால் 2-0 எனும் முன்னிலையுடன் தாய்லாந்து வலுவான நிலையில் உள்ளது.
இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டம் நாளை மறுநாள் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்துக்கு முன்பு வியட்னாமுக்கு எதிராக எந்த ஒரு குழுவும் கோல் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குத் தாய்லாந்து முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமாயின் அடுத்த ஆட்டத்தில் வியட்னாம் குறைந்தது மூன்று கோல்கள் போட்டு தாய்லாந்து கோல் போடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் பலம் பொருந்திய தாய்லாந்துக்கு எதிராக அவ்வாறு செய்வது சவால்மிக்கதாகும்.
அடுத்த ஆட்டத்தை வியட்னாம் 2-0 எனும் கோல் கணக்கில் கைப்பற்றினால் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 2-2 எனும் கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடியும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் கொடுக்கப்படும்.
அதிலும் வெற்றி கோல் போடப்படாத பட்சத்தில் பெனால்டி முறையில் வெற்றிக் குழு நிர்ணயிக்கப்படும்.

