சிங்கப்பூர்: சுசுகி கிண்ண அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூர் குழு தோல்வி கண்டதைத் தொடர்ந்து அதன் பயிற்றுநர் டட்சுமா யோஷிடா (படம்) நீடிப்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சனிக்கிழமை தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4-2 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவினாலும் எட்டுப் பேருடன் ஆட்டத்தின் கடைசி வரை சிங்கப்பூர் குழு போராடியதைக் காண முடிந்தது.
அணியினரின் போராடும் குணத்தைப் புகழ்ந்த பயிற்றுநர் யோஷிடா, "சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து நான் கண்ட சிறப்பான ஆட்டம் இது," என்றார்.
ஹில்டன் சிங்கப்பூர் ஹோட்டலில் நேற்றுக் காலை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் பேசிய அந்த ஜப்பானியர், தமது நாட்டிலும் வேறோர் ஆசிய நாட்டிலும் உள்ள குழுக்களில் இருந்து தமக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துடனான திரு யோஷிடாவின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரியில் அந்த நீட்டிப்புச் செய்யப்பட்டது.
ஒப்பந்த கால இறுதிவரை இங்கு இருப்பீர்களா என்று வினவியபோது, "இப்போதுதான் போட்டி முடிந்துள்ளது. ஒரு காற்பந்து நிபுணராக, என்னுடைய எதிர்
காலத்தைப் பற்றி இப்போது எதுவும் கூற இயலாது," என்றார் திரு யோஷிடா, 47.
சிங்கப்பூர் குழுவில் சேரு
வதற்கு முன் 2017/18 பருவத்தில் வென்போர் கொஃபு என்னும் ஜப்பானிய காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுநராக இவர் இருந்தார்.
தமது குழுவுக்கே திரும்பி வருமாறு யாமானாஷி மாகாணத்தில் உள்ள அந்தக் குழு திரு யோஷிடாவை அழைத்ததாகக் 'ஸ்போர்ட்ஸ் ஹோச்சி' என்னும் ஜப்பானிய நாளிதழ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
அது பற்றி கருத்துரைக்க மறுத்த திரு யோஷிடா, அந்தக் குழு மட்டும் தம்மை அணுகவில்லை என்றார். "அப்போது என்னுடைய கவனமெல்லாம் சுசுகிக் கிண்ணப் போட்டியின் மீது இருந்தது. தற்போது வரை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைச் சேர்ந்த எவரையும் நான் சந்திக்கவில்லை," என்றார்.
2019 மே மாதம் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் பயிற்றுநர் பொறுப்பை ஏற்ற இவர், இருபது போட்டிகளை வழிநடத்தினார்.
அவற்றில் ஆறில் வெற்றி, நான்கில் சமநிலை, பத்தில் தோல்வியைச் சிங்கப்பூர் குழு சந்தித்தது.

