செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி யின் அஷ்வினுக்குப் புதிய வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சார்பில் அதிக விக்கெட் எடுத்தவர் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. 619 விக்கெட்டுகளை (132 போட்டி) கைப்பற்றி அவர் உள்ளார்.
2வது இடத்தில் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் (131 போட்டி) உள்ளார்.
3வது இடத்தில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளார். அவர் இதுவரை 81 போட்டிகளில் 427 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று தொடங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்க அஷ்வினுக்கு வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் இவர் கபில்தேவை முந்த முடியும்.
அதேவேளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அஷ்வினின் சுழற்பந்து எந்த அளவுக்கு எடுபடும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

