பர்மிங்ஹம்: எதிர்பாரா வகையில் கடந்த சில ஆட்டங்களாகச் சரிவைச் சந்தித்த செல்சி காற்பந்து அணி மீண்டு எழுந்துள்ளது. செல்சியில் சில விளையாட்டாளர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர், சிலர் காயமுற்றிருந்தனர். இருந்தாலும் மனவுறுதியுடன் ஆடி அது மீண்டும் வெற்றிப் பாதைக்கு மாறியது.
ஆஸ்டன் வில்லாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி. முதலில் வில்லாதான் முன்னணிக்குச் சென்றது. அதற்குப் பிறகு செல்சி மூன்று கோல்களைப் போட்டு ஆட்டத்தில் வென்றது.
செல்சியின் இரண்டாவது கோலைப் போட்டார் மாற்று ஆட்டக்காரராக வந்த நட்சத்திரம் ரொமெலு லுக்காக்கு. காயமடைந்திருந்ததால் கடந்த சில வாரங்களாக லுக்காக்குவால் சரியாக ஆடமுடியவில்லை.
"இப்படிப்பட்ட ஒரு சிறப்பான விளையாட்டை நான் வெளிப்படுத்தவேண்டியிருந்தது," என்றார் லுக்காக்கு. "கடினமாக உழைத்தேன். எனது விளையாட்டு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் தொடர்ந்து போராடவேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆட்டத்திலும் வெல்லாமல் இருந்திருந்தால் பிரிமியர் லீக் கிண்ணத்தை செல்சி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கலாம். லீக் பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ள செல்சிக்கும் இரண்டாம் இடத்தை வகிக்கும் லிவர்பூலுக்கும் 41 புள்ளிகள் உள்ளன. லிவர்பூல், செல்சியைவிட ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியிருக்கிறது.
இந்த காலகட்டத்தில் வேறு வழியின்றி பல மாற்றங்களைச் செய்யவேண்டியருந்ததாகக் கூறினார் செல்சி நிர்வாகி தாமஸ் டூக்கல். "நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம், விளையாட்டாளர்களை நெருக்குகிறோம். விளையாட்டாளர்கள் போராடி விளையாடிய விதத்தை நான் அதிகம் மதிக்கிறேன். வீரர்கள் பலர் காயமடைந்திருப்பதால் சில மாற்றங்களைச் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். ஆட்டத்திற்குத் தேவையான உத்திகளின் தொடர்பில் மாற்றங்களை செய்யும் வசதி இல்லை," என்றார் டூக்கல்.
இதனுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து ஆட்டங்களை வென்று மான்செஸ்டர் சிட்டிக்குப் போட்டி கொடுக்கவேண்டும் செல்சி. லிவர்பூலும் அபாராமாக ஆடிவருவது செல்சிக்கு இரட்டிப்பு சவால்.

