உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் (பாராலிம்பிக்) விளையாட்டுகளில் மொத்தம் ஐந்து தங்கப்பதக்கங்கள் வென்ற நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூவுக்கு நேற்று சிறப்பு அதிபர் விருது வழங்கப்பட்டது.
சாதனையை ஊக்குவிப்பதற்கான அதிபர் விருதை (President's Award for Inspiring Achievement) நேற்று இஸ்தானா அதிபர் மாளிகையில் அதிபர் ஹலிமா யாக்கோப் யிப்பிற்கு வழங்கி சிறப்பித்தார்.
அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, தனிப்பட்ட சிரமங்களைச் சமாளிப்பதற்கான தைரியத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்திய சிங்கப்பூரர்களைச் சிறப்பித்து கொண்டாடுவதற்காகவே இந்த விருது வழங்கப்படுகிறது என்று அதிபர் ஹலிமா கூறினார். இந்த விருதைப் பெறும் முதல் நபர் யிப் பின் சியூ ஆவார்.
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடந்த உடல் குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் (பாராலிம்பிக்) விளையாட்டுகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் அதற்கு முந்திய போட்டியிலும் பதக்கங்கள வென்றுள்ளார். அவர் மொத்தம் ஐந்து தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

