அகமதாபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றவாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்தடிப்பைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்
படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பன்ட் அரை சதம் அடித்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 80 ஓட்டங்களும், ரிஷப் பன்ட் 56 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஏழாவது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஜோடி 53 ஓட்டங்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாகப் பந்து வீசியதில் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ஓட்டங்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து செய்வதறியாது தவித்தது.
அந்த அணியின் ஒடியன் ஸ்மித் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 36 ஓட்டங்களும் நிக்கலஸ் பூரன் 34 ஓட்டங்களும் எடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அல்ஜாரி ஜோசப், வால்ஷ் 47 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இதனால் இந்தியா 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டு களையும் தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை 3-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணிக்குத் தலைவராக ரோகித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
இந்தச் சாதனை எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருவதாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து வெற்றியாளர் கிண்ணத்துடன் கொண்டாடிய இந்திய அணியினர்.
படம்: ஏஎஃப்பி

