பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் வீரர்
களுக்கான ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று தொடங்கியது. வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.7.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டது.
அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்
ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
நியூசிலாந்து அணி வீரர் போல்ட் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை அணியில் இருந்த போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த ஆஸ்திரேலிய அதிரடி பந்தடிப்பாளர் டேவிட் வார்னரை டெல்லி அணி விலைக்கு வாங்கியது.
சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த டுபிலிசிஸ் ரூ.7 கோடிக்கு ஏலம் போனார்.
இவரை ஏலம் எடுப்பதில் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் கடும் போட்டி நிலவியது.
இறுதியில் பெங்களூரு அணி இவரை வாங்கியது. தென்னாப்பிரிக்க அணி வீரரும் விக்கெட் காப்பாளருமான டிகாக் ரூ 6.75 கோடிக்கு ஏலம் போனார்.
இவரைப் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜயண்ட் வாங்கியது.
இந்நிலையில், அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இதற்கு முன்பு அவர் டெல்லி அணிக்கு விளையாடினார்.
இதனையடுத்து, மற்றொரு இந்திய வீரரான முகம்மது சமியை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

