லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் பிரென்ட்ஃபர்ட் குழுவில் டென்மார்க்கின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் இணைந்துள்ளார்.
பிரென்ட்ஃபர்ட் கம்யூனிட்டி விளையாட்டரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் அவர் பிரென்ஃபர்ட் குழுவுக்காக எப்போது களமிறங்குவார் என்பது குறித்து தகவல் வெளி
யிடப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியில் டென்மார்க் அதன் முதல் ஆட்டத்தில் பின்லாந்தை எதிர்கொண்டது.
அந்த ஆட்டத்தில் எரிக்சன் விளையாடினார். விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் சுயநினைவின்றி திடலில் கிடந்த காட்சியைப் பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். உயிர் பிழைத்த எரிக்சனின் உடலுக்குள் 'இம்பிலான்டபல் கார்டியோவெர்ட்டர் டெஃபிபிரில்லேட்டர்' சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரால் இத்தாலியின் இன்டர் மிலானில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு அவர் மீண்டும் திரும்பியுள்ளார்.
"எரிக்சன் ஆரோக்கியமாக இருக்கிறார் என நம்புகிறேன். முன்பு இருந்த அதே உயர்தரத் திறன்கள் அவரிடம் இன்னும் இருக்கின்றன. அவர் காற்பந்து விளையாடும் அழகு பார்ப்பவரை மகிழ்ச்சி அடையச் செய்யும். அவர் மிக இயல்பாக, அபாரமாக விளையாடக்கூடியவர். வரும் திங்கட்கிழமையன்று நடைபெறும் நட்புமுறை ஆட்டத்தில் அவர் சில நிமிடங்களுக்கு விளையாடுவார்," என்று பிரென்ட்ஃபர்ட் குழுவின் நிர்வாகி தாமஸ் ஃபிராங்க் தெரிவித்தார்.

