மும்பை: இவ்வாண்டு நடக்கவிருக்கும் இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் புதிய முறைக்கு மாறுகின்றன.
பதினைந்தாவது முறையாக இடம்பெறும் ஐபிஎல் போட்டிகளில் இம்முறை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதை அடுத்து, பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
இதற்குமுன் எட்டு அணிகள் தங்களுக்குள் தலா இருமுறை மோத, ஒவ்வோர் அணியும் மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடின.
இந்நிலையில், பிரிவுக்கு ஐந்து என, பத்து அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 'பி' பிரிவில் இடம்பிடித்துள்ளன.
கடந்த ஐபிஎல் பருவங்களில் வெளிப்படுத்திய செயல்பாட்டின் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு, எப்பிரிவில் எந்த அணிகள் இடம்பெறும் என்பது முடிவுசெய்யப்பட்டது.
அதாவது, ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை அணி 'ஏ' பிரிவிலும் நான்கு முறை பட்டம் வென்ற சென்னை அணி 'பி' பிரிவிலும் முதலாம் அணிகளாக உள்ளன. அதுபோல, இருமுறை பட்டம் வென்ற கோல்கத்தா அணி 'ஏ' பிரிவிலும் ஒருமுறை பட்டம் வென்ற ஹைதராபாத் அணி 'பி' பிரிவிலும் இரண்டாம் அணிகளாக இடம்பெற்றுள்ளன. இந்த அடிப்படையில் மற்ற அணிகளும் பிரிக்கப்பட்டன.
இம்முறையும் எல்லா அணிகளும் லீக் சுற்றில் தலா 14 போட்டிகளில் விளையாடும்.
அதாவது, ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் இருமுறை மோதிக்கொள்ளும். இவ்வகையில் அவை தலா எட்டுப் போட்டிகளில் விளையாடும்.
அத்துடன், மற்றொரு பிரிவில் உள்ள நான்கு அணிகளுடன் ஒருமுறையும் தனக்கு நிகராகவுள்ள இன்னோர் அணியுடன் இருமுறையும் மோதும்.
அதாவது, 'பி' பிரிவில் முதல் நிலையில் இருக்கும் சென்னை அணி, 'ஏ' பிரிவில் முதல்நிலையில் உள்ள மும்பை அணியுடன் இரு போட்டிகளிலும் 'ஏ' பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறையும் மோதும்.
இந்த அடிப்படையில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறும். இவற்றில் 55 போட்டிகள் மும்பை நகரில் உள்ள மூன்று விளையாட்டு அரங்குகளிலும் எஞ்சிய 15 போட்டிகள் புனே நகரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'பிளே ஆஃப்' சுற்று ஆட்டங்கள் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. வரும் மார்ச் 26 முதல் மே 29 வரை ஐபில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

