தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் வியட்னாமில் அதிகாரபூர்வமாகத் தொடங்கின
வரும் 2029ஆம் ஆண்டு 35வது முறையாக இடம்பெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றமும் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பும் நேற்று ஒரு கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்தவிருப்பது இது ஐந்தாவது முறை.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டிகள், இதற்குமுன் 1973, 1983, 1993, 2015 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூரில் இடம்பெற்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில், முன்னில்லாத வகையில் சிங்கப்பூர் 84 தங்கம், 73 வெள்ளி, 102 வெண்கலம் என மொத்தம் 259 பதக்கங்களைக் கைப்பற்றி, பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
முதன்முறையாக 1959ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வியட்னாம் தலைநகர் ஹனோயில் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தேறியது.
அதற்கு முன்னதாக தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதில் வரும் ஆண்டுகளில் எந்த நாடுகளில் போட்டிகளை நடத்துவது என்பது முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, 2027ஆம் ஆண்டில் 34வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் மலேசியாவில் நடைபெறவுள்ளன.
2023ஆம் ஆண்டில் கம்போடியாவும் 2025ஆம் ஆண்டில் தாய்லாந்தும் அப்போட்டிகளை ஏற்று நடத்தவிருக்கின்றன.

