உல்வர்ஹேம்டன்: அதிகபட்சம் இன்னும் நான்கு புள்ளிகள் போதும், இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு தக்கவைத்துக்கொள்வது உறுதியாகிவிடும்.
உல்வர்ஹேம்டன் வாண்டரர்ஸ் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் கெவின் டி பிரய்ன நான்கு கோல்களைப் போட்டு அசத்த, மேன்சிட்டி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்தது.
இந்த வெற்றியை அடுத்து, இரண்டாமிடத்தில் உள்ள லிவர்பூல் குழுவிற்கும் தனக்குமான இடைவெளியை மூன்று புள்ளிகளாக உயர்த்திக்கொண்டது மேன்சிட்டி. கோல் வித்தியாசத்திலும் லிவர்பூலைக் காட்டிலும் மேன்சிட்டி ஏழு கோல்கள் முன்னிலையில் உளந்து.
இதனால், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் அதிகபட்சம் நான்கு புள்ளிகளைப் பெற்றாலே மேன்சிட்டி இபிஎல் பட்டத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளும்.
அப்படி நடந்தால், கடந்த ஐந்து பருவங்களில் அக்குழு இபிஎல் பட்டம் வெல்வது இது 4வது முறையாக இருக்கும்.
உல்வ்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் 24 நிமிடங்களுக்குள்ளாகவே மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார் டி பிரய்ன. இபிஎல் வரலாற்றில் ஆக விரைவாகப் போடப்பட்ட 3வது ஹாட்ரிக் இது.
"ஒரே ஆட்டத்தில் நான்கு கோல்கள் போடுவதென்பது மிகச் சிறப்பான ஒன்று," என்றார் 30 வயதான டி பிரய்ன.
உண்மையில், இவர் கணக்கில் இன்னொரு கோலும் சேர்ந்திருக்க வேண்டியது மயிரிழையில் விலகிப்போனது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இவர் உதைத்த பந்து, வலையைவிட்டு சற்றே வளைந்து சென்றது.
"நடப்புப் பருவத்தின் இரண்டாம் பாதியில் துல்லியத்திற்கும் மேம்பட்டதாக இருந்து வருகிறது," என்று டி பிரய்னவின் செயல்பாடு பற்றி வெகுவாகச் சிலாகித்துப் பேசினார் மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
"டி பிரய்ன தாராளமானவர். எப்போதுமே கோல் போட பெரிதும் துணையாக இருக்கும் அவர், இப்போது தன் கணக்கிலும் கோல் எண்ணிக்கையை உயர்த்தியபடி செல்கிறார்," என்றார் கார்டியோலா.
கோல் மன்னனாகக் கருதப்படும் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் அடுத்த பருவத்திலிருந்து மேன்சிட்டிக்காக ஆடவுள்ள நிலையில், அவராலும் டி பிரய்னவிற்கு ஈடுகொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!
உல்வ்சுக்கு எதிரான ஆட்டத்தில் மேன்சிட்டியின் ஐந்தாவது கோலை அடித்தவர் ரஹீம் ஸ்டெர்லிங்.
கடந்த மாதம் லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 எனச் சமநிலை கண்ட பிறகு, தான் ஆடிய ஐந்து ஆட்டங்களில் 23 கோல்களைப் போட்டுள்ளது மேன்சிட்டி.

