ஐபிஎல்லில் இருந்து ஜடேஜா விலகல்
சென்னை: விலா எலும்பில் காயமேற்பட்டுள்ளதால் நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் இனிவரும் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பருவத்தில் சென்னை அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார் ஜடேஜா. ஆனால், அணித் தலைவராக மட்டுமன்றி, ஆட்டக்காரராகவும் அவரது செயல் பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனையடுத்து, எட்டுப் போட்டிகள் முடிந்த நிலையில், தமது ஆட்டத்தில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறி, அணித்தலைவர் பதவியைத் துறந்தார் ஜடேஜா. அதன்பின், சென்னை அணி டோனி தலைமையில் விளையாடி வருகிறது.
ஆஸி., சுற்றுப்பயணம் கேள்விக்குறி
சிட்னி: இலங்கையில் நிலவும் நெருக்கடியான சூழலால் திட்டமிட்டபடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யுமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இலங்கை சென்று மூன்று டி20, ஐந்து ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்யும்படி தன் நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலிய வெளியுறவு, வர்த்தக அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

