ஹனோய்: வியட்னாமில் நடந்துவரும் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்கு நீச்சலில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் 21 வயதான குவா ஜிங் வென்.
பெண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் பந்தயத் தொலைவை நீந்திக் கடக்க 2 நிமிடம் 9.52 நொடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் ஜிங். இது, தேசிய அளவிலும் புதிய சாதனையாகும்.
கடந்த இரு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 200 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் இவரே தங்கம் வென்றிருந்தார்.
பின்னர் ஜிங்கின் மூத்த சகோதரி குவா டிங் வென், பெண்களுக்கான 100 மீ. எதேச்சை பாணி நீச்சலில் தங்கத்தைக் கைப்பற்றினார். 55.60 நொடிகளில் அவர் பந்தயத் தொலைவை நீந்திக் கடந்தார்.
பின்னர் நடந்த ஆடவருக்கான 100 மீ. மல்லாந்து நீச்சலில் அவர்களின் சகோதரர் குவா ஸெங் வென் தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 54.83 நொடிகளில் எல்லைக் கோட்டைத் தொட்டார்.
வியட்னாமுக்கு வெள்ளியும் இந்தோனீசியாவிற்கு வெண்கலமும் கிட்டின.
ஆண்களுக்கான 100 மீ. நெஞ்சு நீச்சலில் சிங்கப்பூரின் மேக்சிமிலியன் ஆங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் 1 நிமிடம் 1.58 நொடியில் பந்தயத் தொலைவைக் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்தார்.
தற்காப்புக் கலையில் ஆதிக்கம்
வுஷு தற்காப்புக் கலையில் ஆடவருக்கான தைஜிஜியான் பிரிவில் சிங்கப்பூரின் சான் ஜுன் கை தங்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக ஆடவருக்கான தைஜிசுவான் பிரிவில் சான் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான டாவ்ஷு-கன்ஷு கலப்புப் போட்டியில் முதலிரு இடங்களிலும் சிங்கப்பூரர்களே வந்தனர். 19.37 புள்ளிகள் பெற்று தங்கத்தைத் தனதாக்கினார் 19 வயதான கிம்பர்லி ஓங். நடப்பு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் ஈட்டிய 2வது தங்கம் இது.
இன்னொரு சிங்கப்பூரரான ஸோ டான் 19.33 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

