நாம் தின்: தொடர்ந்து நான்காவது முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் காற்பந்தில் முதல் சுற்றுடன் வெளியேறியது 23 வயதிற்குட்டோருக்கான சிங்கப்பூர் குழு.
'பி' பிரிவில் இடம்பெற்ற சிங்கப்பூர் குழு, கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் மலேசியாவை நேற்று மாலை எதிர்கொண்டது. ஆனால், அந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கோல் அடித்து மலேசியா முன்னிலைக்குச் சென்றது. ஆனாலும், அதன்பின் மூன்று நிமிடங்களிலேயே ஷா ஷாஹிரான் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
பிற்பாதி ஆட்டத்தின்போது 77வது நிமிடத்தில் ஸ்டூவர்ட் வலைக்கு மிக அருகிலிருந்து கோலடித்து முன்னிலை பெற்றுத் தர, அரங்கிலிருந்த சிங்கப்பூர் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனாலும், அந்த மகிழ்ச்சி அடுத்த ஐந்து நிமிடங்களே நீடித்தது. 82வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பு மூலம் அருமையானதொரு கோலைப் போட்டார் மலேசியாவின் ஃபைஸ்.
அதன்பின் நடந்த இன்னோர் ஆட்டத்தில் தாய்லாந்து 5-0 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வென்றது. இதன்மூலம் ஆறு புள்ளிகளுடன் அக்குழு பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறியது.
இதுவரை மூன்று ஆட்டங்களில் ஆடியிருக்கும் மலேசியா ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நான்கு ஆட்டங்கள் முடிவில் சிங்கப்பூர் ஐந்து புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தது.
இம்முறையும் அரையிறுதி வாய்ப்பு கைகூடாமல் போனதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் சிங்கப்பூர் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நஸ்ரி நசீர்.
"ஒரு பயிற்றுநராக, எனது குழுவை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றத் தவறிவிட்டேன். ஆதலால், ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அதே வேளையில், நம் ஆட்டக்காரர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது," என்றார் அவர்.

