லிவர்பூல்: அடுத்த பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியிலும் எவர்ட்டன் இடம்பெறும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி பிரிமியர் லீக்
போட்டியில் தனது இடத்தை எவர்ட்டன் தக்கவைத்துக்கொண்டது. இதில் சிறப்பு என்னவென்றால் 2-0 எனும் கோல் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில் மனந்தளராமல் போராடி வெற்றிக் கனியை எவர்ட்டன் பறித்தது.
இடைவேளையின்போது பேலஸ் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இத்துடன் தங்கள் குழுவின் கதை முடிந்துவிட்டது என்று சோகத்தில் ஆழ்ந்திருந்த எவர்ட்டன் ரசிகர்களுக்கு பிற்பாதி ஆட்டத்தில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடியாக விளையாடிய எவர்ட்டன் மூன்று கோல்களைப் போட்டு மூன்று புள்ளிகளைப் பெற்றது. ஆட்டம் முடிய கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், கால்வர்ட் லெவின் எவர்ட்டனின் வெற்றி கோலைப் போட்டார்.
வெற்றியைக் கொண்டாட எவர்ட்டனின் குடிசன் பார்க்
திடலில் ரசிகர்கள் வெள்ளமெனத் திரண்டனர்.
மற்றோர் ஆட்டத்தில் பர்ன்லியும் ஆஸ்டன் வில்லாவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
பிரிமியர் லீக் பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் (18, 19, 20வது இடங்கள்) பிடிக்கும் குழுக்கள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும்.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சமநிலை கண்டு ஒரு புள்ளியைப் பெற்றதால் பர்ன்லி 17வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது 18வது இடத்தில் லீட்ஸ் யுனைடெட்டும் 19வது இடத்தில் வாட்ஃபர்ட்டும் கடைசி இடத்தில் நார்விச் சிட்டியும் உள்ளன.
கடைசி லீக் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து லீட்ஸ், பர்ன்லி ஆகிய இரண்டு குழுக்களில் எந்தக் குழு பிரிமியர் லீக்கில் தொடர்ந்து இருக்கும் என்பது தெரியவரும்.
இந்நிலையில், லெஸ்டர் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியபோதும் கோல் போட கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்ட செல்சி, வெற்றி பெற முடியாமல் சமநிலை கண்டது.
இதன்மூலம் செல்சி 71
புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

