செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

11 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் பட்டம் வென்ற ஏசி மிலான்

மிலான்: இத்தாலிய லீக் காற்பந்துப் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை ஏசி மிலான் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றுள்ளது.

நேற்று முன்தினம் சசுவோலோ குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி பரம வைரியான இன்டர் மிலானிடமிருந்து வெற்றியாளர் பட்டத்தை ஏசி மிலான் தட்டிப் பறித்தது.

சேம்டோரியா குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் இன்டர் மிலான் தோற்கடித்தும் பயன் இல்லாமல் போனது. அக்குழுவால் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஸ்பானிய எஃப்1 பந்தயத்தில் முதலிடம் பிடித்த வெர்ஸ்டப்பன்

மொண்ட்மேலோ: ஸ்பானிய எஃப்1 பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வெற்றி பெற்றார். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் அவர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பானிய எஃப்1 பந்தயத்தில் இரண்டாம் நிலையையும் ரெட் புல் அணி தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது. அந்த அணியின் செர்ஜியோ பெரேஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பந்தயத்தின் தொடக்கத்தில் வெர்ஸ்டப்பன் சில சிரமங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.