சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் ஜப்பானின் சேனா கவாகாமியை அவர் எதிர்கொண்டார். வெறும் 32 நிமிடங்களுக்கு நீடித்த அந்த ஆட்டத்தை 21-15, 21-7 எனும் நேர்செட்டுகளில் சிந்து கைப்பற்றினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள சிந்து, இவ்வாண்டு நடைபெற்ற சையது மோடி இன்டர்நேஷனல், சுவிஸ் பொது விருது ஆகிய பூப்பந்துப் போட்டிகளில் வாகை சூடி கிண்ணம் ஏந்தினார்.
தற்போது இவ்வாண்டுக்கான சூப்பர் 500 பட்டத்தை முதல்முறையாக வெல்லும் வாய்ப்பை அவர் நெருங்கியுள்ளார்.
சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் போதும், அந்தப் பெருமையை அவர் அடைந்துவிடுவார்.
இதற்கிடையே, ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலக வெற்றியாளரான சிங்கப்பூரின் லோ கியன் இயூ தோல்வியின் பிடியில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறினார்.
அவரை இந்தோனீசியாவின் ஆண்டனி சினிசுக்கா கின்டிங் 21-17, 21-14 எனும் நேர்செட்டுகளில் வீழ்த்தினார்.
அத்துடன், சிங்கப்பூர் பொது விருதை வெல்லும் லோவின் கனவும் கலைந்தது.

