செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

யர்கன் கிளோப் பெருமிதம்;

பேட்ரிக் வியேரா மனநிறைவு

சிங்கப்பூர்: தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் சிங்கப்பூர் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது. லிவர்பூலுக்காக ஜோர்டன் ஹெண்டர்சனும் முகம்மது சாலாவும் கோல் போட்டனர்.

லிவர்பூல் விளையாடுவதை நேரில் காண விளையாட்டரங்கத்தில் திரண்ட 50,217 உள்ளூர் ரசிகர்களுக்கு நேற்று முன்தின ஆட்டம் கண்ணுக்கு விருந்தாக இருந்ததுடன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இந்நிலையில், பேங்காக்கில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு எதிராக நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி, அடுத்த மூன்று நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு சிங்கப்பூரில் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்த தமது ஆட்டக்காரர்களை லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் பாராட்டினார். வெற்றி குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமது ஆட்டக்காரர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லாதபோதிலும் பலம்பொருந்திய லிவர்பூலுக்கு எதிராக விட்டுக்கொடுக்காமல் அவர்கள் விளையாடியது மனநிறைவைத் தந்திருப்பதாக கிறிஸ்டல் பேலஸ் குழுவின் நிர்வாகி பேட்ரிக் வியேரா கூறினார்.

மேன்சிட்டியில் தொடரும் மாரேஸ்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டியுடனான தமது ஒப்பந்தத்தை அல்ஜீரியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரியாட் மாரேஸ் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

இதன்படி, அவர் 2025ஆம் ஆண்டு வரை சிட்டிக்காகக் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஓர் ஓட்ட வித்தியாசத்தில் ஆயர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து

டப்ளின்: அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்தடித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூசிலாந்து 360 ஓட்டங்களைக் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் குப்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.