காமன்வெல்த் விளையாட்டுகள்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூரர் டியோங்

1 mins read
719a86fb-d741-412b-b52a-94c4df1560ce
ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டியோங் ட்சென் வெய் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

காமன்வெல்த் விளையாட்டுகளின் ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சிங்கப்பூர் வீரர் டியோங் ட்சென் வெய்.

தகுதிச் சுற்றில் அவர் இரண்டாவதாக முடித்தார்.

டியோங் எடுத்துக்கொண்ட நேரம் 23.24 விநாடிகள்.

23.06 விநாடிகளை எடுத்துக்கொண்ட இங்கிலாந்தின் பெஞ்சமின் புரவுட் மட்டுமே டியோங்கைவிட வேகமாக நீந்தினார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளின் நான்குக்கு 100 கலப்பு எதேச்சை பாணி தொடர் நீச்சல் போட்டி இறுதிச் சுற்றில் சிங்கப்பூரைச் சேர்ந்த அணி ஆறாவதாக வந்தது.

சகோதரர்கள் குவா செங் வென், குவா டிங் வென், குவா ஜிங் வென் மற்றும் ஜானத்தன் டான் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர் அணி மூன்று நிமிடங்கள் 31.90 விநாடிகளில் போட்டியை முடித்தது.

காமன்வெல்த் சாதனையை முறியடித்து மூன்று நிமிடங்கள் 21.18 விநாடிகளில் போட்டியை முடித்த ஆஸ்திரேலிய அணி தங்கம் வென்றது.

வெள்ளிப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து, வெண்கலம் கனடாவிற்குச் சென்றது.

ஆண்கள் 200 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் 21 வயது சிங்கப்பூர் வீரர் மேக்சிமில்லியன் ஆங் ஆறாவதாக முடித்தார்.

இரண்டு நிமிடங்கள் 8.07 விநாடிகளில் போட்டியை முடித்த ஆஸ்திரேலியாவின் ஸேக் ஸ்டபல்டி-கூக் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டுகளின் முதல் நாளில் ஏழு நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.

அவற்றில் ஐந்து தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.