காமன்வெல்த் விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்

காமன்வெல்த் விளையாட்டுகள்: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்

1 mins read
5bba0de8-09d5-4afc-8e8b-9219c97e35d6
ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சிங்கப்பூரின் டியோங் ட்சென் வெய் (இடது). படம்: சாவ்பாவ் -

இங்கிலாந்தின் பர்மிஹம் நகரில் நடைபெறும் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூரின் முதல் பதக்கத்தை வென்றுள்ளார் நீச்சல் வீரர் டியோங் ட்சென் வெய்.

ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் 24 வயது டியோங் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.21 விநாடிகள்.

இங்கிலாந்தின் பென் புரவுட் தங்கத்தைக் கைப்பற்றினார்.

22.81 விநாடிகளில் போட்டியை முடித்து புரவுட் காமன்வெல்த் விளையாட்டுச் சாதனையை முறியடித்தார்.

வெண்கலப் பதக்கம் நியூசிலாந்தின் கேமரன் கிரேக்குச் சென்றது.

"வெல்வதற்காகத்தான் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள். வெள்ளிப் பதக்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அடுத்த முறை என்னால் இதைவிட வேகமாகவும் சிறப்பாகவும் நீந்தமுடியும் என நம்புகிறேன். அதனால் நான் செய்ததை நானே ஆராய்ந்து போட்டிகளில் எவ்வாறு என்னை மேம்படுத்திக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்," என்று டியோங் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 'ஃபினா' உலக நீச்சல் போட்டிகளின் ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் பிரிவில் டியோங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

உலக நீசசல் போட்டிகளின் வரலாற்றில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று ஆண் வீரர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றவர் டியோங்.