லுசான்: ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற லுசான் டைமண்ட் லீக் போட்டித் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (படம்) முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்று உள்ளார்.
இப்போட்டியில் 89.08 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சூரிக் டைமண்ட் லீக் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
அத்துடன் 2023 உலகத் திடல்தட சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருந்த 24 வயது நீரஜ் சோப்ரா, அதன் பிறகு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இருந்து காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், டைமண்ட் லீக்கில் அதிரடி சாதனை படைத்திருக்கிறார்.
இதுவரை மூன்று முறை
89 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து சாதனை படைத்திருக்கிறார் நீரஜ்.
சென்ற ஜூன் மாதம் ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீட்டர் தூரமும் ஜூலை மாதம் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரத்திற்கும் நீரஜ் ஈட்டி எறிந்திருந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

