அபுதாபி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நேற்று தொடங்கியது. முதல் லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் இலங்கையும் மோதின.
ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.
துபாய் அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு இப்போட்டி தொடங்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியின்போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்திருந்தது. இதனால் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
ரோகித் சர்மா தலைமையில் களம் காணும் இந்திய அணியில், ரிஷப் பண்ட், சூர்யகுமார், தினேஷ் கார்த்திக், பாண்டியா ஆகியோர் அணிக்குப் பலமாக இருப்பர். சுழலில் யுசுவேந்திர சஹல் எதி ரணிக்குச் சவாலாக இருப்பார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடைசி நேரத்தில் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலக நேர்ந்தது.
அதேபோல் பாகிஸ்தான் தரப்பிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அஃப்ரிடியும் காயம் காரணமாக விலகியிருக்கிறார்.
பும்ரா இல்லாத குறையை அர்ஷ்தீப் சிங் பூர்த்தி செய்யக்கூடும். ஏனெனில் 20 ஓவர் போட்டிகளில் பும்ராவுக்கு அடுத்தபடியாக குறைந்த ஓட்டங்களை விட்டுக் கொடுப்பவராக அவர் உருவெடுத்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் புதிய அணுகுமுறையும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் நிதானமாகவும் கடைசி ஓவர்களில் அதிரடியாகவும் விளையாடி வந்த இந்திய அணி, இப்போதெல்லாம் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால், பவர்பிளேவில் இந்திய அணியின் ஓட்ட விகிதம் சீராக முன்னேற்றம் கண்டுள்ளது. 2021ல் 7.87ஆக இருந்த ஓட்ட விகிதம் இவ்வாண்டு 8.67ஆக உயர்ந்தது.
அந்த வகையில் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கான சுயபரிசோதனையாகவும்
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான முன்னோட்டமாகவும் இருக்கும் என்று கருதப்படுகி
றது.

