ஹைதராபாத்: இரு அணிகளும் தரப்புக்கு ஒரு போட்டியில் வென்றிருப்பதால் தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்றிரவு பொருத இருக்கின்றன.
மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 2வது போட்டி நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது.
மழையால் எட்டு ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பந்தடித்தது. அவ்வணி எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்களைச் சேர்த்தது. இரண்டு ஓவர்களை வீசி, 13 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல்.
அடுத்து பந்தடித்த இந்திய அணியில், தலைவர் ரோகித் சர்மா 20 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசி, இறுதிவரை களத்தில் இருந்தார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரியையும் ஒரு சிக்சரையும் விளாசினார். இதனை அடுத்து, நான்கு பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிக்சரில் ரோகித் முதலிடம்
அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தோர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அடித்த நான்கு சிக்சர்களுடன் சேர்த்து இதுவரை அவர் 176 சிக்சர்களை விளாசி உள்ளார். மார்ட்டின் கப்டில் (172, நியூசிலாந்து), கிறிஸ் கெய்ல் (124, வெஸ்ட் இண்டீஸ்), மோர்கன் (120, இங்கிலாந்து), ஆரோன் ஃபிஞ்ச் (119, ஆஸ்திரேலியா) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

