மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் நியூகாசல் யுனைடெட் குழுவும் மோதுகின்றன.
சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்துக்குப் போட்டியிட்ட இவ்விரு குழுக்களின் தற்போதைய இலக்கு வேறு. எப்படியாவது லீக் பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் முடித்தாலே போதும். அதை அடித்தளமாக வைத்து மேலும் முன்னேறுவதில் இரு குழுக்களும் கவனம் செலுத்தவேண்டும்.
நியூகாசல் கடந்த சுமார் 25 ஆண்டுகளாகவே சுமார்தான். அவ்வப்போது மீண்டுவரும் அறிகுறிகளைக் காட்டினாலும் குறிப்பிடும் வகையில் எதுவும் செய்யவில்லை. இருமுறை அடிமட்டத்துக்குச் சென்று இங்கிலாந்து காற்பந்தில் அடுத்த நிலையில் இருக்கும் 'சாம்பியன்ஷிப்' பட்டியலுக்கும் இறங்கியது நியூகாசல்.
2013ஆம் ஆண்டுவரை இங்கிலாந்துக் காற்பந்தில் ஆதிக்கம் செலுத்திவந்த மான்செஸ்டர் யுனைடெட் பழைய நிர்வாகி அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்வு பெற்றதிலிருந்து சோபிக்கவில்லை. பல வேளைகளில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி லீக் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட்டும் ஆறாம் இடத்தில் இருக்கும் நியூகாசலும் இன்று மோதவுள்ளன. மீண்டும் பெரிய குழுவாக உருவெடுக்க நியூகாசலின் புதிய உரிமையாளர்கள் அதிகம் செலவுசெய்துள்ளனர். மான்செஸ்டர் யுனைடெட்டும் அவ்வாறே செய்துள்ளது.
எனினும், மின்னல் வேகத்தில் வளரவேண்டும் என்ற ஆசை இரு குழுக்களிடமும் தற்போது இல்லை. படிப்படியாக முன்னேறுவதே குறிக்கோள்.
குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் இந்த ஆட்டத்தில் வெல்லாவிட்டால் விமர்சனம் கடுமையாகும். நிலைமையைச் சீராக்க கூடுதல் கோல்களைப் போடும் சூத்திரத்தை மான்செஸ்டர் யுனைடெட் கண்டுபிடிக்கவேண்டும்.
விறுவிறுப்பாக விளையாடும் நியூகாசல், அதிக கோல்களை விடாமல் தொடர்ந்து வெற்றி பெறுவது முக்கியம்.

