பேட்மிண்டன்: முதல்நிலை வீரரை வீழ்த்திய சிங்கப்பூர் நட்சத்திரம்

பேட்மிண்டன்: முதல்நிலை வீரரை வீழ்த்திய சிங்கப்பூர் நட்சத்திரம்

1 mins read
889ca9c9-e5fc-4815-9622-fc51294c0ec9
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸெல்சனை சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூ (படம்) வீழ்த்தினார். படம்: ஏஎஃப்பி -

டென்மார்க் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸெல்சனை சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூ வீழ்த்தினார்.

முப்பதே நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-17, 21-10 எனும் ஆட்டக் கணக்கில் லோ வாகை சூடினார். இதன்மூலம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக 39 ஆட்டங்களில் வென்று வந்த விக்டரின் வெற்றிப் பயணத்தை லோ முடிவுக்குக் கொண்டு வந்தார்.

உலகத் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள லோ, "வேறு நிலையில் இருக்கும் விக்டரை வீழ்த்துவது என்பது ஒரு சாதனையே. ஆனால், எவரும் எல்லா நேரங்களிலும் வெல்ல முடியாது. அவரும் மனிதர்தான், அதுவும் மதிக்கத்தக்க ஒரு மனிதராவார்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

இன்று சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் லோ பொருதுகிறார். இவ்விருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவர் மற்றொருவருடன் பேட்மிண்டன் ஆட்டங்களில் விளையாடி வந்துள்ளனர்.