சிட்னி: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 'சூப்பர்-12' சுற்று நேற்று தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் குழுவும் நடப்பு வெற்றியாளருமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் மோதியது.
சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் தடம் பதித்து தனது கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.
பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில்
பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது.
ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை அவர்கள் பறக்கவிட்டனர்.
கான்வே 92 ஓட்டங்களுடனும் நீஷம் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புயல் வேகத்துடனும் துல்லியமாகவும் பந்துவீச, ஆஸ்திரேலியப் பந்தடிப்பாளர்கள் திக்குமுக்காடினர்.
இதனால் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென சாய்ந்து அதன் பந்தடிப்பாளர்கள் ஆட்டம் இழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து 89 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளும் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு மோதுகின்றன.

