சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்தடிக்க முடிவு செய்தது. முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனை ஓர் ஓட்டத்தில் ஆட்டமிழக்கச் செய்தார் இலங்கையின் தீக்ஷனா.
பிறகு வந்த கான்வே, வில்லியம்சன் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களோடு வெளியேறினர்.
நான்காவது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை டேரல் மிட்செல்லும் கிளென் ஃபிலிப்சும் மீட்டனர்.
ஃபிலிப்சை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இலங்கையின் நிசங்கா தவறவிட்டுவிட்டார். இதையடுத்து, அதிரடி காட்டிய ஃபிலிப்ஸ் 104 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது நியூசிலாந்து.
இதையடுத்து, 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி 6.1 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதன்பிறகு இலங்கை அணியால் மீண்டு வரவே முடியவில்லை. 19.2 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்
இன்றிரவு 7 மணிக்கு நடைபெறஉள்ள ஆட்டத்தில் தென்னப்பிரிக்காவும் இந்தியாவும் மோதவுள்ளன.
முந்தயப் போட்டிகளில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை இந்தியா வீழ்த்தியது. ஆனால், இந்த ஆட்டங்களிலும் இந்தியாவின் கே.எல்.ராகுல் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனவே, இன்றைய ஆட்டத்தில், ராகுலுக்குப் பதிலாக ரிஷப் பன்ட் களமிறக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், "இரண்டு ஆட்டங்களை வைத்து ஆட்டத்திறனை மதிப்பிட முடியாது. எனவே, ராகுலுக்குப் பதிலாக வேறு யாரையும் களமிறக்க விரும்பவில்லை," என்று இந்திய அணியின் பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.

