உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்குவதற்குக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அப்போட்டிகளை எங்கு அல்லது எப்படிக் கண்டுகளிப்பது என்பது தெரியாமல் சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்கள் எரிச்சலடைந்து, புலம்பி வருகின்றனர்.
காற்பந்துப் போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து சிங்டெல்லும் ஸ்டார்ஹப்பும் ஃபிஃபாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்ற ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், போட்டிகளை நேரலையில் காண்பது குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது 36 நாள்களுக்கு முன்னதாக போட்டிகளின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. ஒளிபரப்பு குறித்து ஆக தாமதமான அறிவிப்பு இது.
2018ஆம் ஆண்டில் போட்டி தொடங்க 50 நாள்களுக்கு முன்னதாகவே போட்டி குறித்த ஒளிபரப்புத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
ஒளிபரப்புத் தகவல்களுக்காக காத்திருக்கும் அர்ஜெண்டினா காற்பந்து ரசிகரான ராகுல் வாரியர், நேரலையில் போட்டிகளைக் காண்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுமோ என்ற கேள்வியை எழுப்பினார்.
சில ஆண்டுகளுக்குமுன் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்த ஒளிபரப்புத் தகவல்கள் ஒருநாள் முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார் மற்றொரு காற்பந்து ரசிகர்.
கத்தாரில் நவம்பர் 20ஆம் தேதி உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்குகின்றன.

