மெல்பர்ன்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இதுவரை 44 ஆட்டங்கள் விளையாடப்பட்டன.
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டில் தொடங்கியது.
இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமே இருமுறை கிண்ணம் ஏந்தியுள்ளது.
அந்த வரிசையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கும் அந்தப் பெருமை சென்றடையும்.
2009ஆம் ஆண்டில் இலங்கையை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கிண்ணம் வென்றது.
ஓராண்டு கழித்து ஆஸ்திரேலியாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இங்கிலாந்து மகுடம் சூடியது.
இம்முறை இங்கிலாந்து வெற்றி பெறும் என்று பரவலாக நம்பப்
படுகிறது.
அரையிறுதியில் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு இந்திய அணியை அது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓரங்கட்டியதே இதற்கு முக்கிய காரணம்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
இனி எந்தத் தடை வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கிண்ணத்தைக் கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் அவர்கள் உள்ளனர்.
மற்ற அணிகளைக் கதிகலங்கச் செய்யும் திறனும் தரமும் தமது அணிக்கு இருப்பதாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ பட்லர் தெரிவித்துள்ளார்.
தமது குழுவைத் தோற்கடிப்பது எளிதல்ல என்றார் அவர்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் பந்தடிப்பாளர் டேவிட் மாலன், வேகப்பந்துவீச்சாளர் மார் வூ ஆகிய இருவரும் காயம் காரணமாகக் களமிறங்கவில்லை.
அவர்களுக்குப் பதிலாக ஃபில் சால்ட்டும் கிறிஸ் ஜோர்டனும் அணியில் இடம்பெற்றனர்.
காயம் அடைந்த இவரும் முழுமையாகக் குணமடைந்தால் இங்கிலாந்துக்குக் கூடுதல் தெரிவு கிடைப்பதுடன் அது மேலும் வலுவடையும்.
இந்தியாவுக்கு எதிராக பட்லர் 80 ஓட்டங்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ஓட்டங்களும் எடுத்து இந்தியாவைப் புரட்டி எடுத்தனர்.
இம்முறை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனுப்பும் பந்தை அனைத்துத் திசைகளிலும் பறக்கவிட அவர்கள் ஆவலுடன் காத்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே, ஆரம்பகட்டத்தில் ஏற்படும் சறுக்கல்களைக் கண்டு மனந்தளராமல் தொடர்ந்து போராடினால் இலக்கை அடைய முடியும் என்று நிரூபித்துள்ள பாகிஸ்தான் அணியும் கிண்ணத்துக்குக் குறிவைத்துள்ளது.
சூப்பர்-12 சுற்றில் இந்தியா
விடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஸிம்பாப்வேயிடம் ஓர் ஓட்டம் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது.
ஆனால், தென்னாப்பிரிக்காவை 33 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நெதர்லாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பங்ளாதேஷை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அது வென்றது.
அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்து இன்றைய இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை விளாசி ஓட்டங்களைக் குவித்த பட்லர், ஹேல்ஸ் ஆகிய இருவரையும் வந்த வழியே திருப்பி அனுப்பும் பொறுப்பு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முகம்மது நவாஸ், ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அணித் தலைவரும் நட்சத்
திரப் பந்தடிப்பாளருமான பாபர் அசாம் முத்திரை பதிப்பார் என்று பாகிஸ்தானிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
"இங்கிலாந்தின் தரமான
பந்தடிப்புக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் உயர்தரப் பந்துவீச்சைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
"எங்களிடம் புயல் வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
"20 ஓவர்கள் முடிவதற்குள் அவர்களால் எதிரணியைத் திணறடித்து விக்கெட்டுகளைச் சாய்க்க முடியும்," என்று பாகிஸ்தான் அணியின் மதியுரைஞரான மேத்யூ ஹேடன் தெரிவித்தார்.

