லண்டன்: உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராக இங்கிலாந்து நட்சத்திரம் ஃபில் ஃபோடனை சில தரப்பினர் கருதுகின்றனர். அதை மறுத்துள்ளார் ஃபோடன்.
பிரான்சின் கிலியான் எம்பாப்பே, பிரேசிலின் நெய்மார் ஆகியோருடன் ஒப்பிடுவதற்குத் தனக்குத் தகுதியில்லை என்று இவர் கூறினார். எனினும், அவர்களின் நிலையை அடையப் பாடுபடப்போவதாகவும் குறிப்பிட்டார் இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளர்களான மான்செஸ்டர் சிட்டி குழுவில் ஆடும் 22 வயது ஃபோடன்.
கடந்த ஈராண்டுகளாக சிட்டிக்கு அபாரமாக விளையாடிய ஃபோடன் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். எனினும், இவர் இங்கிலாந்துக்கு எதிர்பார்ப்புகளை இதுவரை பூர்த்திசெய்யவில்லை என்ற ஒரு வருத்தம் ரசிகர்களிடையே இருந்துவருகிறது.
இங்கிலாந்துக்கு ஆடிய 18 ஆட்டங்களில் இருமுறை மட்டுமே கோல் போட்டுள்ளார் ஃபோடன். எனினும், இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் கவனிக்கப்படவேண்டிய விளையாட்டாளர்களில் ஒருவராக ஃபோடன் விளங்குகிறார்.
"சரியான பாதையில் செல்வதுதான் மிகவும் முக்கியம். எனது குழுவிற்கு நான் விளையாடுவதைப் போலவே தேசிய அணிக்கும் விளையாடுவதே எனது இலக்கு. இவ்வாண்டு எனது குழுவிற்கு நிறைய கோல்களைப் போட்டிருக்கிறேன். அவ்வாறே தேசிய அணிக்கும் செய்ய விரும்புகிறேன்," என்றார் ஃபோடன்.
"அண்மைக் காலமாக நான் இங்கிலாந்துக்குக் கூடுதல் கோல்களைப் போட்டிருக்கவேண்டும் என்பதை மறுக்கமுடியாது. திடலின் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால் கோல்களுக்காக எப்போதும் ஹேரி கேனை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. அவர் சிறப்பான விளையாட்டாளர் என்பதால் இதர அணிகள் அவரை சரியாக ஆடவிடாமல் தடுக்க முயற்சி செய்யும்," என்றும் ஃபோடன் குறிப்பிட்டார்.
உலகக் காற்பந்துத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து. ஃபோடன், கேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதிக எதிர்பார்ப்புடன் அனைத்துலகப் போட்டிகளில் அடிக்கடி களமிறங்கும் இங்கிலாந்து பலமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியில் போக்கை மாற்றியது. இறுதியாட்டம் வரை சென்ற இங்கிலாந்து பெனால்டிகளில்தான் இத்தாலியிடம் தோல்வியடைந்தது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியிலும் அவ்வாறே சிறந்து விளங்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளார் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட்.அணியின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கான மிகப் பெரிய சவால்.
முதல் சுற்றில் 'பி' பிரிவில் ஆடும் இங்கிலாந்து. ஈரான், அமெரிக்கா, மற்றொரு பிரிட்டிஷ் அணியான வேல்ஸ் ஆகியவையும் அப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இங்கிலாந்து இதுவரை ஒருமுறைதான் உலகக் கிண்ணத்தை வென்றிருக்கிறது. 1966ஆம் ஆண்டு போட்டி சொந்த மண்ணில் நடைபெற்றபோது அந்நிகழ்வு இடம்பெற்றது.
அதற்குப் பிறகு இங்கிலாந்து சிலமுறை போட்டிக்குத் தகுதிபெறாமலும் இருந்தது. ஆனால், அண்மைக் காலமாகப் புத்துயிர் பெற்றுள்ளது.

