தோஹா: கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும்போது விளையாட்டாளர்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மயங்கி விழும் அபாயம் அதிகம் என்று மைக் டிப்டன் எனும் உடற்செயலியல் வல்லுநர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதிகமான வெப்பநிலையில் விளையாடும்போதோ பயிற்சி செய்யும்போதோ விளையாட்டாளர்கள் சரியாக முடிவெடுக்காமல் போகக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வெப்பத்தைச் சமாளிக்க பயிற்றுவிப்பாளர்கள் தங்கள் அணிகள் விளையாடும் வேகத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கான உத்திகளைப் பின்பற்றக்கூடும் என்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் திரு டிப்டன் சொன்னார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசைவிட அதிகமாக இருந்துவருவதைத் தொடர்ந்து வேல்ஸ் அணி நேற்று முன்தினம் தனது பயிற்சி நேரத்தைப் பிற்பகலிலிருந்து மாலைக்கு ஒத்திவைத்தது. ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் பொதுவாக கத்தாரில் வெப்பநிலை இவ்வளவு அதிகமாக இருக்காது.
எனினும், உலகக் கிண்ணப் போட்டி தொடரும்போது வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆட்டங்கள் நடைபெறவுள்ள எட்டு விளையாட்டரங்குகளிலும் குளிரூட்டி வசதி இருப்பது விளையாட்டாளர்களுக்கு நற்செய்தியாக அமையலாம்.

