மான்செஸ்டர்: பியர்ஸ் டோர்கள் என்பவருடன் நடைபெற்ற நேர்காணலில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிராக அதன் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோசமான வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்மீது தான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதாக யுனைடெட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் மான்செஸ்டர் யுனைடெட்டும் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் நிறைவடையும் முன்னரே யுனைடெட் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டரங்கைவிட்டு வெளியேறினார். அச்செயல் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
எனினும், யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் தனது கோபத்தைத் தூண்டியதே தான் அவ்வாறு நடந்துகொண்டதற்குக் காரணம் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவும் கசப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் தன்னை மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்போவதில்லை என்று டென் ஹாக் கூறியதாக 37 வயது ரொனால்டோ சொன்னார். எனினும், சில வாரங்களுக்குப் பிறகு ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி மூன்று நிமிடங்களுக்கு டென் ஹாக் தன்னைக் களமிறக்க முயன்றதாக ரொனால்டோ குறிப்பிட்டார்.
"எனக்குத் தரவேண்டிய மதிப்பை அவர் வழங்கவில்லை. அதுதான் உண்மை. அதனால்தான் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தில் நான் அரங்கைவிட்டு வெளியேறினேன்," என்றார் ரொனால்டோ.
'டாக்டிவி' ஒளிவழிக்காக நடைபெற்ற நேர்காணலில் ரொனால்டோ பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். நேற்று முன்தினம் ஒளிபரப்பான நேர்காணலின் இரண்டாம் பாகத்தில் இக்கருத்துகள் இடம்பெற்றன.
மேலும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் முதல் பாகத்தில் வெளியாயின.
இதற்கிடையே, இப்பருவம் தொடங்குவதற்கு முன்பு சவூதி அரேபியக் குழு ஒன்று 305 மில்லியன் பவுண்டுக்குத் தன்னை வாங்க முயன்றதாகவும் அதைத் தான் மறுத்ததாகவும் ரொனால்டோ தெரிவித்தார். அக்குழுவில் சேர்ந்திருந்தால் உலகில் எந்தக் காற்பந்து வீரருக்கும் வழங்கப்படாத அளவு அதிக சம்பளம் தனக்குக் கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது குறித்து நிலவிய வதந்திகள் உண்மைதான் என்று ரொனால்டோ உறுதிப்படுத்தினார்.
"எந்தக் குழுவும் என்னை வாங்க விரும்பவில்லை என்று ஊடகங்கள் சொன்னது பொய். அது முற்றிலும் உண்மையன்று," என்று அவர் கூறினார். யுனைடெட்டில் இருப்பது தனக்கு மகிழ்ச்சியளித்ததால்தான் அக்குழுவிலேயே இருக்கத் தான் முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

