தோஹா: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் லத்தீன் அமெரிக்க அணியான எக்குவடோரும் போட்டியை ஏற்று நடத்தும் கத்தாரும் சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்குச் சந்திக்கவுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்குகிறது கத்தார். இதற்கு முன்பு போட்டிக்கு மூன்று முறை தகுதிபெற்று ஒருமுறை மட்டும் இரண்டாம் சுற்றுவரை முன்னேறியது எக்குவடோர்.
இவ்வாண்டுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் வென்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் இலக்கு இவ்விரு அணிகளுக்குமே உண்டு.
உலகக் காற்பந்துத் தரவரிசையில் கத்தார் 50வது இடத்தில் உள்ளது. எக்குவடோர் 44வது இடத்தை வகிக்கிறது.
'ஏ' பிரிவில் இந்த ஆட்டத்திற்குப் பிறகு இரு அணிகளும் நெதர்லாந்தையும் செனகலையும் சந்திக்கவேண்டும். இரண்டையும் வெல்வது சாதாரணமன்று.
அதனால் இந்த ஆட்டத்தில் வெல்வது இரு அணிகளுக்கும் முக்கியம்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் உள்ளன. முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் அணிகள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும்.
போட்டியை ஏற்று நடத்துவதால் கத்தார் உலகக் கிண்ணத் தகுதியாட்டங்களில் ஆடவில்லை. அதனால் போட்டிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள அதற்குப் போதுமான கால அவகாசமும் நீக்குப்போக்கும் இருந்தன.
அது கத்தாருக்கு சாதகமாக அமையலாம்.
எனினும், ஒவ்வோர் ஆட்டத்தையும் மிகவும் கவனமாக அணுகினால்தான் கத்தாரால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறமுடியும்.
கடந்த சில ஆட்டங்களாக கோல் போட சிரமப்பட்டுள்ளது எக்குவடோர். இருப்பினும், இந்த ஆட்டத்தில் அந்த அணிதான் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கத்தாரைவிட எக்குவடோரில்தான் பலருக்குப் பரிச்சயமான வீரர்கள் இருப்பது இதற்கு ஒரு காரணம். மோய்சஸ் கைசேடோ, எனர் வலென்சியா உள்ளிட்டோர் அத்தகைய வீரர்களில் சிலர்.
இப்பிரிவில் நெதர்லாந்தும் செனகலும் நாளை மோதுகின்றன.

