தோஹா: கத்தாரின் விளையாட்டரங்குகளில் மதுபானத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் உட்பட சில தரப்பினர் அதிருப்தியடைந்தனர். அது குறித்து அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ கடுமையாகப் பேசியிருக்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மதுபானம் அருந்தாமல் இருந்தால் உங்களால் உயிர் வாழமுடியும்," என்ற கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இன்ஃபன்டினோ குறிப்பிட்டார்.
"பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இது பொருந்தும்," என்றும் அவர் சொன்னார்.
மேலும், உலகக் கிண்ணப் போட்டியை கத்தார் ஏற்று நடத்துவதற்கு எதிராக ஐரோப்பா கண்டனம் தெரிவித்து வருவதையும் இன்ஃபன்டினோ சாடினார். ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று ஒரு நியாயத்தைப் பின்பற்றுவதாகவும் முன்பு செய்த தவறுகளுக்கு 3,000 ஆண்டுகளுக்கு அவை மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, போட்டியில் 'விஏஆர்' எனப்படும் காணொளி வாயிலாக இயங்கும் துணை நடுவர்கள் கூடுதல் துல்லியமாக 'ஆஃப்சைட்' முடிவுகளை எடுப்பர் என்று அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் நடுவர்கள் தலைவர் பியர்லுயிஜி கொலினா தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகமாகியிருப்பதால் அது சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்று மணிநேரம் மதுபானம் இல்லாமல் ரசிகர்களால் உயிர் வாழமுடியும்.
அனைத்துலகக் காற்பந்துக்
கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ

