தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இங்கிலாந்தின் தொடக்க ஆட்டம் வழக்கமான ஒன்றாக இருக்கும் என பெரும்பாலானோர் நினைக்கக்கூடும்.
2018 உலகக் கிண்ணப் போட்டியின்போது இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்று வரை சென்றது. பின்னர் யூரோ 2020 போட்டியின்போது இறுதிச்சுற்று வரை அது சென்றது. இம்முறை நடைபெறும் போட்டிக்கு இங்கிலாந்து எளிதாக தகுதிபெற்றது.
ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வென்று மூன்று புள்ளிகளைப் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு. ஆனால், அந்த அணிக்கு முன்னால் தடைக்கற்கள் இருக்கவே செய்கின்றன.
தான் கிள்ளுக்கீரையல்ல என்பதை ஈரானும் அதன் பங்கிற்கு நிரூபித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று ஆட்டங்களில் 10ல் எட்டில் அது வென்றது. அவற்றில் நான்கு கோல்களை மட்டுமே அது விட்டுக்கொடுத்தது.
அண்மைய ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் ஈரான் 20வது இடத்தில் உள்ளது. செர்பியா, மொரோக்கோ, போலந்து ஆகிய அணிகளுக்கு மேலே ஈரான் உள்ளது.
ஆனாலும், உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு இரண்டே மாதங்கள் இருந்தபோது தலைமைப் பயிற்றுவிப்பாளர் மாற்றப்பட்டது ஈரானுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து டிராகன் ஸ்கோசிச் நீக்கப்பட்டு, கார்லோஸ் குவேரோஸ் அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
இவ்வாண்டு முன்னதாக எகிப்திய அணியை ஆப்பிரிக்க கிண்ணப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு குவேரோஸ் இட்டுச்சென்றார்.
கடந்த புதன்கிழமை துனீசியாவுடன் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் ஈரான் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தமது அணி தயாராக இந்த ஆட்ட முடிவு வகை செய்ததாக குவேரோஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கத்தார் நேரப்படி 4 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பது பற்றி தமக்குக் கவலை இல்லை என்று இங்கிலாந்து வீரர் எரிக் டயர் கூறினார்.
கடைசியாக நடந்தேறிய இரு பிரதான போட்டிகளில் அரையிறுதிச்சுற்றுக்குச் சென்ற ஒரே ஐரோப்பிய அணி இங்கிலாந்து அணியே. அதன் பொருட்டு, இம்முறையும் வலுவான ஆட்டத்திறனை வெளிப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முற்படுவர்.

