லிஸ்பன்: காற்பந்து உலகின் ஆகச் சிறந்த வீரர்களில் இருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லயனல் மெஸ்ஸியும் காற்பந்து வரலாற்றிலேயே மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றை உருவாக்க கைகோர்த்துள்ளனர்.
கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதை முன்னிட்டு இந்தப் படத்தையும் இவ்விருவரும் தத்தம் சமூக ஊடகப் பக்கங்களில் நேற்று முன்தினம் பகிர்ந்தனர்.
இணையத்தில் பரவலாகிவரும் இந்தப் படத்தை இணையவாசிகள் 'நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம்' என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.
சொகுசு கைப்பைகளைத் தயாரிக்கும் நிறுவனமான லூயி விட்டோன், விளம்பர நோக்கத்திற்காக இந்தப் புகைப்படத்தை எடுத்தது.
ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஆழ்ந்த கவனத்துடன் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவதை இந்தப் படம் காட்டுகிறது. எதிரணியினரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை இவர்கள் சிந்திப்பதுபோல தெரிகிறது.

