உலகக் கிண்ணத்தைத் தக்கவைக்க முற்படும் பிரான்சுக்குப் பின்னடைவு
பாரிஸ்: பிரான்ஸ் காற்பந்து அணியைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரர் கரிம் பென்ஸிமா (படம்), உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட மாட்டார்.
பயிற்சியின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாக பிரெஞ்சு காற்பந்துச் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
தசைப் பிரச்சினையால் அவதியுறும் பென்ஸிமா, பிரான்ஸ் அணியின் பயிற்சி அமர்விலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
"இந்த உலகக் கிண்ணப் போட்டியை முக்கிய இலக்காகக் கொண்டிருந்த பென்ஸிமா, அதில் பங்கேற்க முடியாமல் போயிருப்பது எனக்கும் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
"பிரெஞ்சு அணிக்கு இது பின்னடைவாக இருந்தாலும், என்னுடைய வீரர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களுக்காக காத்திருக்கும் இந்தப் பெரிய சவாலை எதிர்கொள்ள எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம்," என்று பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஷாம்ப் கூறினார்.
ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவில் கடந்த பருவம் பென்ஸிமாவுக்கு அருமையான பருவமாக அமைந்தது. அனைத்து வகை போட்டிகளிலும் 46 ஆட்டங்களில் 44 கோல்களைப் போட்ட அவர், ஸ்பானிய லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை ரியால் மட்ரிட் வெல்ல வித்திட்டார்.
2014 உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் போட்ட வீரராக பென்ஸிமா, 34, திகழ்ந்தார்.
2018 போட்டியின்போது அவர் அணியில் இடம்பெறவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் அவர் பிரெஞ்சு அணியில் மீண்டும் இடம்பெற்றார்.
காயம் காரணமாக ஏற்கெனவே பால் போக்பா, இங்கோலோ காண்டே, கிறிஸ்தஃபர் இகுங்கு ஆகிய வீரர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கெடுக்கவில்லை.
'டி' பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாளை மறுதினம் அதிகாலை 3 மணிக்கு பிரான்ஸ் களமிறங்குகிறது.

