உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு ஆள்பற்றாக்குறையை எதிர்நோக்கிய கத்தார்
தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு மூன்றே வாரங்கள் இருந்த நிலையில், கத்தாரின் விளையாட்டாளர் பாதுகாப்புக் குழு நூற்றுக்கணக்கான ஆடவர்களைப் பாதுகாவலர்களாக வேலைக்குச் சேர்த்தது.
விளையாட்டரங்குகளில் கூட்டத்தைக் கண்காணிப்பது அவர்களது பணி என்று வேலைக்குச் சேர்ந்தவர்களில் இருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர். பணியமர்த்தப்பட்டவர்களில் சிலருக்கு அனுபவம் கிடையாது.
இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், சூடான், இந்தோனீசியா போன்ற நாடுகளிலிருந்து வந்த அந்த ஆடவர்கள், இந்த மாதத் தொடக்கத்தில் கத்தாரின் காவல்துறைக் கல்லூரியில் பயிற்சி பெற்றனர். சீருடைகளைப் பெற்றுக்கொண்ட அவர்கள், விளையாட்டரங்குகளில் நடைபெற்ற பயிற்சி அமர்வுகளில் முதன்முறையாக பணியமர்த்தப்பட்டனர்.
வேலைக்குச் சேர்ந்தவர்களில் சிலருக்கு பாதுகாவல் துறையில் அனுபவம் இருந்திருந்தாலும், மற்ற சிலர் நாட்கூலித் தொழிலாளர்களாகவும் ஓட்டுநர்களாகவும் அலுவலக ஊழியர்களாகவும் பணியாற்றி இருந்ததாக வேலைக்குச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூறினார்.
ஒருமாத காலம் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தக் கடைசிக்கட்ட தயார்நிலைப் பணிகள், கத்தார் எதிர்நோக்கிவரும் தளவாடவியல் சவால்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
உலகம் முழுவதுமிருந்து 1.2 மில்லியன் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாவல் பணிகளுக்காக 50,000க்கும் அதிகமானோருக்கு கத்தார் பயிற்சி அளித்துள்ளது.
மூன்று மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள கத்தாரில் 12 விழுக்காட்டினர் மட்டுமே அந்நாட்டுக் குடிமக்களாவர். இதனால், உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு கத்தார் ஆள்பற்றாக்குறையை எதிர்நோக்கியது.
உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் முதல் மத்தியக் கிழக்கு நாடாகவும் ஆகச் சிறிய நாடாகவும் கத்தார் விளங்குகிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பில்லியன் கணக்கான டாலரை கத்தார் செலவிட்டாலும், இவ்வளவு பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை அது இதற்கு முன்னதாக நடத்தியதில்லை.
காற்பந்து ஆட்டங்கள் நடைபெறும் இடங்களில் சோதனைச்சாவடிகளை நடத்துவதற்கான கட்டாய ராணுவச் சேவைக்காக, வெளிநாடுகளிலிருந்து அரசதந்திரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடிமக்களை கத்தார் வரச் சொல்லி உள்ளது.

