கைரோ: பயங்கரவாத அமைப்பான அல் காய்தாவின் வட்டாரப் பிரிவு ஒன்று, கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்குமாறு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆனாலும், இந்தப் போட்டியுடன் தொடர்பில் தாக்குதல்களை நடத்தப்போவதாகவோ வன்முறையைத் தூண்டப்போவதாகவோ அல் காய்தா மிரட்டல் விடுக்கவில்லை.
"அரேபிய தீபகற்பத்திற்குள் நெறியற்றவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ஊழலை விதைப்பவர்கள் மற்றும் நாத்திகத்தைக்" கொண்டு வருவதற்காக கத்தாரை அல் காய்தா விமர்சித்துள்ளது.
முஸ்லிம் நாடுகளில் நிலவும் ஆக்கிரமிப்பும் மற்றும் அடக்குமுறையில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப உலகக் கிண்ணப் போட்டி முற்படுவதாக அல் காய்தா கூறியது.
"இந்தப் போட்டியைப் பின்தொடர்வதையும் அதில் கலந்துகொள்வதையும் தவிர்க்கும்படி எங்கள் முஸ்லிம் சகோதரர்களை எச்சரிக்கிறோம்," என்று அந்த அறிக்கையை 'சைட் இன்டெலிஜன்ஸ்' குழு நேற்று முன்தினம் மேற்கோள் காட்டியது. போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கத்தாரின் மனித உரிமை விவகாரம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் தரும் விதமாக, பாலியல் தன்மை அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் உலகக் கிண்ணப் போட்டியைப் பார்க்க அனைவரும் வரவேற்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

