சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கிரிக்கெட் அணித் தலைவராக எம்.எஸ்.டோனி இருந்தபோது, அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன், நடப்பு விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
சங்கக்காராவின் உலக சாதனையைத் தகர்த்ததோடு ரோஹித் சர்மாவின் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார்.
தம்மை கழற்றிவிட்ட சிஎஸ்கேவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடுகிறார் என்றே இவரது இந்த திடீர் எழுச்சி பார்க்கப்படுகிறது. விஜய் ஹசாரே கிண்ணம் எனும் 50 ஒவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி சங்கக்காராவின் ஒருநாள் கிரிக்கெட் சாதனையை ஜெகதீசன் முறியடித்துள்ளார். குமார் சங்கக்காரா 2015 உலகக் கோப்பையில் 4 சதங்களைத் தொடர்ந்து அடித்தது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள் 15 சிக்சர்களுடன் 277 ஓட்டங்களை விளாசினார். இதனையடுத்து ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்களை எடுத்து படைத்த சாதனையையும் ஜெகதீசன் முறியடித்தார்.
இவரது அதிரடியான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 506 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 102 பந்துகளில் 154 ஓட்டங்களைக் குவித்தார்.

