தோஹா: உலகக் கிண்ண காற்
பந்துப் போட்டி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் சவூதி அரேபியாவும் இன்று மோதுகின்றன.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
பலம் பொருந்திய அர்ஜெண்டினா எளிதில் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சவூதியை குறைத்து எடைபோட்டுவிட முடியாது. மிக வேகமாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
அர்ஜெண்டினா நிதானத்துடனும் முனைப்புடன் விளையாடி, கோல் போட கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் அது எளிதில் வெற்றி பெறலாம்.
பிரதான கிண்ணம் ஒன்றை ஏந்த அர்ஜெண்டினாவின் 28 ஆண்டு காத்திருப்பு கடந்த ஆண்டு கோப்பா அமெரிக்கா போட்டியில் வென்றதுடன் முடிவுக்கு வந்தது.
இறுதி ஆட்டத்தில் பிரேசிலை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது அர்ஜெண்டினா.
1994ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பா அமெரிக்கா வெற்றியாளராக உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா களமிறங்குவது இதுவே முதல்முறை.
1994ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் ருமேனியாவிடம் அர்ஜெண்டினா தோற்று வெளியேறியது.
இம்முறை 1978, 1986ஆண்டு
களைப் போல கிண்ணம் வெல்லும் முனைப்புடன் அது களமிறங்குகிறது.
முதல் சுற்று ஆட்டங்களில் சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகிய குழுக்களை அர்ஜெண்டினா எதிர்கொள்கிறது.
"சவூதி அரேபியா வலிமைமிக்க குழு. புயல் வேகத்தில் ஓடும், விளையாடும் ஆற்றல் கொண்ட ஆட்டக்காரர்களை அந்த அணி கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிராக விளையாடுவது எளிதான காரியம் அல்ல.
இது ஒருபுறம் இருக்க, இவ்வாண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் இதுவே எங்களது முதல் ஆட்டம் ஆகும். முதல் ஆட்டம் சவால்மிக்கதாக இருப்பது வழக்கம்.
"ஆனால் எங்களுக்கு எவ்வித நெருக்குதலும் மனவுளைச்சலும் இல்லை. உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இருக்கிறோம். உலகக் கிண்ணப் போட்டி அர்ஜெண்டினாவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும்.
"களத்தில் இருக்கும்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும்," என்று அர்ஜெண்டினாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் அனைவரின் கண்களும் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி இருக்கும் திசையை நோக்கி இருக்கும்.
இதுவே தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கக்கூடும் என்று அர்ஜெண்டினாவின் அணித் தலைவரான 35 வயது மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்பு உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கை அவருக்கு உள்ளது.
இதற்கிடையே, அர்ஜெண்டினாவைச் சந்திக்க சவூதி அரேபியா ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினாவை எப்படியும் அடக்கிக் காட்ட வேண்டும் என்ற பேரவாவுடன் சவூதி அரேபியா காத்துக் கொண்டிருக்கிறது.
அர்ஜெண்டினாவின் கோல் முயற்சிகளை முறியடிக்க தனது தற்காப்பு அரணை அக்குழு வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தற்காப்பில் கவனம் செலுத்தி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்தும் அணுகுமுறையை சவூதி கடைப்பிடித்தால் அதில் ஆச்சரியம் இல்லை.
தகுதிச் சுற்றில் களமிறங்கிய 18 ஆட்டங்களில் 13 ஆட்டங்களை அது கைப்பற்றியது. ஒரே ஓர் ஆட்டத்தில் மட்டும் அது தோல்வி அடைந்தது.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி கத்தாரில் நடைபெறுவதால் அண்டை நாடான சவூதி அரேபியாவிலிருந்து ரசிகர்கள் பலர் நேரில் வந்து ஆதரவு அளிப்பர் என்று நம்பப்படுகிறது.
"வலிமைமிக்க குழுக்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கும். ஆனால் போட்டி என வரும்போது சில சமயங்களில் எதிர்பாரத நிகழ்வுகள் நடப்பதுண்டு.
"யாரும் எதிர்பார்க்காதபோது வலிமைமிக்க குழுக்களைத் தோற்கடிப்பதே சிறிய குழுக்களின் இலக்காக இருக்க வேண்டும்," என்று சவூதி அரேபியாவின் நிர்வாகி ஹேர்வே ரெனார்ட் தெரிவித்தார்.
தகுதிச் சுற்றில் சவூதிக்காக 17 கோல் போட்ட ஃபஹாட் அல் முவாலாட்டால் இம்முறை களமிறங்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் மற்றொரு நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரரான அல் ஹேரி, கண்ணிமைக்கும் நேரத்தில் கோல் போடக்கூடியவர்.
சவூதியின் மத்தியத்திடல் ஆட்டக்காரர் சல்மான் அல் ஃபராஜும் அபாரத் திறன் கொண்டவர். மத்தியத்திடல் பகுதியை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றலைக் கொண்டவர்.
ஆனால் அர்ஜெண்டினாவுக்கு எதிராக அவரால் தமது முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

