யுனைடெட்டுடனான பிரச்சினை போர்ச்சுகலைப் பாதிக்காது'
தோஹா: மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் தமக்கும் இடையிலான பிரச்சினை, போர்ச்சுகலின் உலகக் கிண்ணக் கனவை பாதிக்காது என்று நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
தமது மனதிற்கு சரி எனத் தோன்றினால் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி அதை வெளிப்படையாகக் கூறும் பழக்கத்தைக் கைவிடப்போவதில்லை என்றார் அவர்.
அண்மையில் யுனைடெட்டைக் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார் ரொனால்டோ. அதையடுத்து, ரொனால்டோவுக்கு எதிராகச் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுப்பது குறித்து யுனைடெட் ஆராய்ந்து வருகிறது. அவரைக் குழுவிலிருந்து நீக்குவது தொடர்பாக யுனைடெட் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
யுனைடெட் தமக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும் அதன் நிர்வாகி டென் ஹாக்கை தாம் மதிக்கப்போவதில்லை என்றும் 37 வயது ரொனால்டோ கூறினார்.
ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் களமிறங்குகிறது. எச் பிரிவில் இடம்பெறும் போர்ச்சுகல் நாளை மறுநாள் கானாவுடன் பொருதுகிறது.
ஜோக்கோவிச்சின் சாதனைப் பட்டியல் தொடர்கிறது
டுரின்: இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் வாகை சூடி கிண்ணம் ஏந்தியுள்ளார்.
இந்தக் கிண்ணத்தை ஜோக்கோவிச் ஆறாவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸபர் ரூட்டுடன் அவர் மோதினார். தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச் 7-5, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
கோஹ்லியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 18.5 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். ஒற்றையாளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ஓட்டங்களை விளாசினார்.
இதன் மூலம் விராத் கோஹ்லியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 7-வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இதன் மூலம் அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராத் கோஹ்லி 6 முறை பெற்றிருந்தார்.
எஃப் 1 பந்தயத்தில் லெக்லர் இரண்டாவது இடம்; முதலிடத்துக்குக் குறி
அபு தாபி: இப்பருவத்துக்கான எஃப் 1 பந்தயத்தில் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அடுத்த பருவத்தில் எப்படியாவது முதலிடத்தைப் பிடித்து மகுடம் சூட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், இப்பருவத்துக்கான முதல் இடத்தைப் பிடித்தார்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அபுதாபி நகரில் நடைபெற்ற பந்தயத்துடன் இப்பருவத்துக்கான எஃப் 1 பந்தயம் நிறைவடைந்தது.
'ஒன்லவ்' பட்டை அணியும் திட்டத்தைக் கைவிட்ட ஐரோப்பியக் குழுக்கள்
தோஹா: பன்முகப் பாலீர்ப்புச் சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக் கிண்ண காற்பந்தாட்டங்களின்போது கைகளில் ஒன்லவ் பட்டையை அணிய சில ஐரோப்பிய குழுக்கள் திட்டமிட்டிருந்தன.
ஆனால் அந்தத் திட்டத்தை இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய குழுக்களுடன் மேலும் ஐந்து குழுக்கள் தற்போது கைவிட்டுவிட்டன.
ஆட்டத்தின்போது அத்தகைய பட்டையை அணிந்தால் தண்டனை விதிக்கப்படும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 'ஒன்லவ்' பட்டையைத் தங்கள் ஆட்டக்காரர்கள் அணியமாட்டார்கள் என்று சம்பந்தப்பட்ட அணிகள் உறுதி அளித்துள்ளன.

