தோஹா: கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் கத்தாரும் தென்னமெரிக்கக் குழுவான எக்வடோரும் மோதின.
இதில் எக்வடோர் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் எக்வடோரின் அணித் தலைவரும் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரருமான எனர் வெலன்சியா பந்தை வலைக்குள் அனுப்பினார்.
ஆனால் ஆஃப்சைட் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
எனினும் வெலன்சியா கோல் போடுவதைக் கத்தாரால் தடுக்க முடியாமல் போனது.
16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வெலன்சியா கோலாக்கினார்.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் கத்தாரின் பெனால்டி எல்லைக்குள் பந்து அனுப்பப்பட்டது.
பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார் வெலேன்சியா.
உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக எக்வடோர் பயிற்றுவிப்பாளர் குஸ்தாவோ அல்ஃபாரோ தெரிவித்தார்.
ஆனால் முதல் சுற்றைக் கடந்து காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற எக்வடோர் இதைவிட சிறப்பாக விளையாட வேண்டும் என்றார் அவர்.
"முதல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றியைப் பதிவு செய்துவிட்டோம். இதுதான் மிகவும் முக்கியம். ஆட்டத்தைக் கைப்பற்ற செய்ய வேண்டிய அனைத்தையும் எங்கள் ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக செய்தனர்.
"இடைவேளையின்போது ஆட்டம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறதா என்று எனது ஆட்டக்காரர்களிடம் கேட்டேன்.
"எங்களால் இதைவிட சிறப்பாக விளையாட முடியும் என்று அவர்கள் பதிலளித்தனர்," என்றார் அல்ஃபாரோ.
வரும் வெள்ளிக்கிழமையன்று வலிமைவாய்ந்த நெதர்லாந்தை எக்வடோர் சந்திக்கிறது.
இதற்கிடையே, முதல் ஆட்டத்தில் தங்கள் குழு வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் விளையாட்டரங்கத்தில் திரண்ட கத்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
ஆட்டம் முடிவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான கத்தார் ரசிகர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இருப்பினும், ரசிகர்களின் பேராதரவு தமது குழுவுக்குக் கிடைத்ததாக கத்தாரின் பயிற்றுவிப்பாளர் ஃபிலிக்ஸ் சஞ்செஸ் கூறினார்.
இதற்கு முன்பு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் நாடு அதன் முதல் ஆட்டத்தில் தோற்றதில்லை.
முதல் ஆட்டத்தில் எக்வடோரிடம் தோல்வியைத் தழுவியதன் மூலம் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த முதல் உபசரணை நாடு என்ற பதிவில் கத்தார் இடம்பிடித்துள்ளது.
ஆட்டத்தில் கத்தார் ஆட்டக்காரர்கள் அனுப்பிய பந்து ஒரு
முறைகூட இலக்கை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதற்றம் காரணமாக கத்தார் ஆட்டக்காரர்களால் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியவில்லை என்று சஞ்செஸ் தெரிவித்தார்.