தோஹா: புதிய தோற்றத்துடன் இளம் வீரர்களுடன் இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கவுள்ளது ஸ்பெயின்.
2010ஆம் ஆண்டு ஸ்பெயின் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. அந்த அணியில் இருந்த செர்ஜியோ புஸ்கெட்ஸ் மட்டும்தான் தற்போதைய அணியிலும் இடம்பெற்றுள்ளார். அணிக்குப் புத்துயிர் ஊட்டுவதை மையமாகக் கொண்டு விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் லூயி என்ரிக்கே.
2014ஆம் ஆண்டுப் போட்டியில் நடப்பு வெற்றியாளர்களாகக் களமிறங்கிய ஸ்பெயின் மிகவும் மோசமாக விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறியது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சென்ற போட்டியில் சற்று மேம்பட்டது. ஆனால் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறியது.
2008ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை உலகக் காற்பந்தை ஒரு கை பார்த்த ஸ்பெயின் அண்மைக் காலமாகக் களையிழந்து காணப்பட்டது. எனினும், வரும் ஆண்டுகளில் அந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது லூயி என்ரிக்கேயின் போக்கு.
பார்சிலோனாவின் 18 வயது வீரர் காவி, 19 வயது பெட்ரி ஆகியோர் ஸ்பெயினின் இளம் விளையாட்டாளர்களில் சிலர்.
அணியில் 14 விளையாட்டாளர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
"இவர்கள் இளையர்கள். அதனால் இவர்களிடம் துடிப்பும் உத்வேகமும் இருக்கும். இவர்கள் முழு ஆற்றலை வெளிப்படுத்துவர் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்த உலகக் கிண்ணப் போட்டியின் அனைத்து ஏழு ஆட்டங்களிலும் இடம்பெறுவர் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்றார் 52 வயது என்ரிக்கே. எனினும், 'இ' பிரிவில் ஸ்பெயின் இன்று சந்திக்கவுள்ள கோஸ்டா ரிக்கா நல்ல போட்டி தரும் என்று நினைப்பதாகவும் என்ரிக்கே குறிப்பிட்டார்.
கோஸ்டா ரிக்காவிற்கோ நிலைமை வேறு. பல வயதான விளையாட்டாளர்களுடன் போட்டியில் களமிறங்கவுள்ளது.
முதன்முறையாக 1990ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றது கோஸ்டா ரிக்கா. அப்போட்டியில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறியது.
அதற்குப் பிறகு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் 2014ஆம் ஆண்டுப் போட்டியில் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறியது.
அந்தப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடிவந்த நெதர்லாந்திடம் பெனால்டிகளில்தான் தோல்வியடைந்தது. எனினும், சென்ற போட்டியில் முதல் சுற்றைத் தாண்டவில்லை கோஸ்டா ரிக்கா.
ஸ்பெயின், ஜெர்மனி, கோஸ்டா ரிக்கா, ஜப்பான் இடம்பெறும் 'இ' ஆகச் சவாலானது எனக் கருதப்படுகிறது.

