அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்பு சரியாக விளையாடாது இருந்த இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற 'பி' பிரிவு ஆட்டத்தில் ஈரானை 6-2 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இங்கிலாந்தின் ஆறு கோல்களில் இரண்டைப் போட்டார் இளம் புக்காயோ சாக்கா. முதல் கோலைப் போட்டார் மற்றோர் இளம் நட்சத்திரமான ஜூட் பெலிங்ஹம்.
அபாராமாக விளையாடிய இங்கிலாந்து இதேபோல் மற்ற ஆட்டங்களிலும் ஆட கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மற்றொரு 'பி' பிரிவு ஆட்டத்தில் வேல்சும் அமெரிக்காவும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி வேல்சை மீட்டார் நட்சத்திரம் கேரத் பேல்.
அமெரிக்காவுக்கு கோல் போட்டவர் முன்னாள் லைபீரிய நட்சத்திரம் ஜார்ஜ் வெயாவின் மகன் டிம் வெயா.
64 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது வேல்ஸ்.
'ஏ' பிரிவில் சற்று தள்ளாடி செனகலை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து. இரு கோல்களும் ஆட்டத்தின் 80வது நிமிடத்திற்குப் பிறகுதான் விழுந்தன.
திறமையான விளையாட்டாளர்களைக் கொண்டிருந்தாலும் சீராக விளையாட சிரமப்பட்டது நெதர்லாந்து. நட்சத்திரம் சாடியோ மானே இல்லாதபோதும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது செனகல்.
எனினும், செனகல் கோல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியது. கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் சரியாக உபயோகித்துக்கொண்டது நெதர்லாந்து.
நெதர்லாந்து. செனகல், கத்தார், எக்குடோர் ஆகிய அணிகள் 'ஏ' பிரிவில் இடம்பெறுகின்றன.
முன்னதாக போட்டியின் முதல் ஆட்டத்தில் கத்தாரை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது எக்குவடோர்.

