தோஹா: பல ஆண்டுகளாகக் காற்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்துள்ள பிரேசில் இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இன்று பின்னிரவு களமிறங்குகிறது. 'ஜி' பிரிவில் இன்று செர்பியாவைச் சந்திக்கிறது பிரேசில்.
உலகக் கிண்ண வரலாற்றில் ஆக அதிக முறை கிண்ணத்தை வென்றிருக்கிறது பிரேசில். கிண்ணத்தை ஐந்து முறை கைப்பற்றியிருக்கிறது. 2002ஆம் ஆண்டுப் போட்டிக்குப் பிறகு கிண்ணத்தை வென்றதில்லை.
எனினும், பல ஆண்டுகளாக சற்று களையிழந்திருந்த பிரேசில் இப்போது புத்துயிர் பெற்றுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத பிரேசில் நட்சத்திரம் நெய்மார் இம்முறை குறையைத் தீர்க்கும் முயற்சியில் இறங்கவுள்ளார்.
போட்டியில் பிரேசில் களமிறங்கவிருப்பதை முன்னிட்டு இதுவரை அமைதியாக இருந்துவந்துள்ளார் நெய்மார். பிரேசில் கத்தார் சென்றடைந்ததிலிருந்து அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிரேசில் சீருடையின் கால்சட்டையில் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட படத்தை நெய்மார் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார். ஆறாவது முறையாக பிரேசில் உலகக் கிண்ணத்தை வெல்லவேண்டும் என்பதை அந்தப் படம் சித்திரிக்கிறது.
அதைச் செய்துமுடிப்பதே நெய்மாரின் கனவு. அதிலேதான் அவரின் முழு கவனமும் ஊறியுள்ளது.
'ஜி' பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் கேமருனும் இன்று மோதுகின்றன. ஒரு காலத்தில் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆகச் சிறப்பாகச் செய்த ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைக் கொண்டிருந்த கெமருன் மீண்டும் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயற்சி செய்யும்.
68 ஆண்டுகளில் முதன்முறையாக போட்டியில் இரண்டாம் சுற்றைத் தாண்டும் இலக்குடன் இருக்கிறது சுவிட்சர்லாந்து.


