தோஹா: சர்ச்சை சூழ்ந்திருந்த போர்ச்சுகல் காற்பந்து அணியின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோமீதுதான் கவனம் அதிகமாக இருந்து வருகிறது. எனினும், அது தன்னைப் பாதிக்கவிடாமல் விளையாட்டில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது போர்ச்சுகல்.
'எச்' பிரிவில் போர்ச்சுகலும் கானாவும் இன்று மோதுகின்றன. அதை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் முதல் 10 நிமிடங்களில் ரொனால்டோவைப் பற்றித்தான் கேள்விகள் அதிகம் எழுப்பப்பட்டன.
போர்ச்சுகல் பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சாந்தோஸ், அணியின் மற்றொரு நட்சத்திரம் புரூனோ ஃபெர்னாண்டஸ் ஆகிய இருவரும் ரொனால்டோவை மையமாகக் கொண்ட குறைந்தது நான்கு கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டிஇருந்தது.
போர்ச்சுகல் அணித்தலைவரான 37 வயது ரொனால்டோ, இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நேற்று முன்தினம் வெளியேற நேரிட்டது. அந்த விவகாரம் போர்ச்சுகலைப் பாதிக்குமா என்ற ஐயம் நிலவுகிறது.
செய்தியாளர் கூட்டத்தில் ரொனால்டோவைப் பற்றி மட்டுமே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டதால் பயிற்றுவிப்பாளர் சாந்தோஸ் சற்று எரிச்சலடைந்தார். யுனைடெட்டிலும் ரொனால்டோவுடன் விளையாடும் ஃபெர்னாண்டஸ் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தன்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது சாந்தோஸ் கானாவுக்கு எதிரான ஆட்டத்திற்குக் கவனத்தைக் கொண்டு வந்தார்.
"கானா எங்களுக்குப் பல சவால்களைத் தரும். கானாவிடம் பல சிறப்பான விளையாட்டாளர்கள் இருக்கின்றனர். எங்களுக்கு அது தெரியும். அவர்கள்மீது நாங்கள் மதிப்பு கொண்டுள்ளோம். ஆனால் முதலில் நாங்கள் கவனத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்," என்றார் சாந்தோஸ்.
"ஆப்பிரிக்க அணிகள் மிகவும் திறமைவாய்ந்தவை. அவை எப்படி விளையாடும் என்பதைக் கணிக்கமுடியாது. அவை மேம்பட்டுள்ளன. முன்பெல்லாம் அவற்றின் வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடுவர். இப்போதெல்லாம் அணியாகச் சிறப்பாக ஆடுகின்றனர். ஆட்டம் எங்களுக்குச் சவாலாக இருக்கும். ஆனால் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று சாந்தோஸ் குறிப்பிட்டார்.
"கிண்ணத்தை வெல்லும் இலக்கு எங்களிடம் உள்ளது. அதனால்தான் இங்குள்ளோம். எங்களால் முடிந்வரை சிறப்பாக ஆட முயற்சி செய்வோம்," என்று சாந்தோஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

