செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஹேரி கேனின் கணுக்காலில் மருத்துவப் பரிசோதனை

லண்டன்: இங்கிலாந்து நட்சத்திரம் ஹேரி கேன், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அந்த அணியின் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறுவாரா என்பது ஆகக் கடைசி நிலவரப்படி கேள்விக்குறியாக உள்ளது. கணுக்காலில் காயமுற்றதால் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட பிறகுதான் அமெரிக்காவுக்கு எதிரான 'பி' பிரிவு ஆட்டத்தில் கேன் விளையாடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையை நேற்று மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

நாளை இங்கிலாந்தும் அமெரிக்காவும் மோதவுள்ளன. இங்கிலாந்தும் ஈரானின் மோதிய முந்தைய ஆட்டத்தில் கேன் காயமுற்றார்.

சிங்கப்பூரில் லா லீகா ஆட்டம்

நடைபெறக்கூடும்

மட்ரிட்: ஸ்பெயினின் லா லீகா காற்பந்து லீக்கின் ஆட்டம் ஒருநாள் சிங்கப்பூரில் நடைபெறக்கூடும். லா லீகா அமைப்பின் தலைவர் ஜேவியர் தெபாஸ் இதைத் தெரிவித்தார்.

"லா லீகா ஆட்டத்தை நடத்த சிங்கப்பூர் மிகச் சிறந்த இடம். எனினும், தற்போதைக்கு அதை நிகழ்த்துவது குறித்து ஆராய்ந்து மட்டுமே வருகிறோம்," என்று திரு தெபாஸ் குறிப்பிட்டார். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் உள்ள லா லீகா தலைமையகத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

லா லீகா ஆட்டம் ஒன்றை வெளிநாட்டில் நடத்துவது குறித்து ஸ்பானிய காற்பந்துச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து சிட்டி நிர்வாகியாக இருக்கவுள்ள கார்டியோலா

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகியாக பெப் கார்டியோலா தொடர்ந்து பதவி வகிக்கவுள்ளார். 2025ஆம் ஆண்டுவரை தான் நிர்வாகியாகப் பதவி வகிக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தில் கார்டியோலா கையெழுத்திட்டுள்ளார் என்று சிட்டி உறுதிப்படுத்தியது.

இதற்கு முன்பு நடப்பில் இருந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையவிருந்தது. கார்டியோலா தொடர்ந்து சிட்டியில் இருக்கவேண்டும் என்று பல தரப்பினர் விரும்பினர்.

51 வயது கார்டியோலாவின் தலைமையில் சிட்டி நான்கு முறை பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது. புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் கார்டியோலா ஒன்பது ஆண்டுகளாக சிட்டி நிர்வாகியாகப் பதவி வகிப்பார்.